108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. வைஷ்ணவர்களால் 'கோயில்' என்றும், 'பூலோக வைகுண்டம்' என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் தானாகவே தோன்றியதாக கருதப்படும் எட்டு சுயம்பு க்ஷேத்திரங்களுள் முக்கியமானது. பதினொரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட க்ஷேத்திரம். ஏழு பிரகாரங்களைக் கொண்ட மிகப்பெரிய கோயில். அயோத்தியில் இராமனின் பட்டாபிஷேகம் முடிந்தவுடன், தனது முன்னோர்களால் பிரம்ம தேவனிடம் இருந்து பெறப்பட்டு பூஜை செய்து வந்த பெருமான் விக்கிரகத்தை இராமபிரான் விபீஷணனிடம் கொடுத்தார்.
விபீஷணன் இலங்கைக்குச் செல்லும் வழியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளுக்கிடையே உள்ள ஒரு இடத்தில் விக்கிரகத்தை வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தான். மீண்டும் எடுக்க முயற்சி செய்தபோது விக்கிரகத்தை எடுக்க முடியாமல் சோர்வுற்றான். தாம் அங்கேயே இருக்க விரும்புவதாகவும், ஆண்டுக்கு ஒருமுறை வந்து தன்னை தரிசனம் செய்து செல்லும்படியும் பகவான் பணித்தார். இப்பகுதியே காலப்போக்கில் பெரியதொரு கோயிலாக மாறி 'திருவரங்கம்' என்று பெயர் பெற்று விளங்குவதாகக் கூறுவர்.
மூலவர் ஸ்ரீரங்கநாதன் என்ற திருநாமத்துடன் புஜங்க சயனம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் நம்பெருமாள். தாயார் ஸ்ரீரங்க நாயகி என்று வணங்கப்படுகின்றார். சந்திரன், விபீஷணன், தர்மவர்மா, ரவிதர்மன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
தொண்டரடிப்பொடியாழ்வார் நந்தவனம் அமைத்து கைங்கர்யம் செய்த க்ஷேத்திரம். திருமங்கை ஆழ்வார் திருமதில் அமைத்து கைங்கர்யம் செய்த க்ஷேத்திரம். ஸ்ரீராமானுஜர் பல்லாண்டுகள் இங்கு தங்கி நம்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த ஸ்தலம். வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளைலோகாசார்யார், பெரிய நம்பி ஆகியோர்களின் அவதார ஸ்தலம்.
கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்றிய தலம், கம்பராமாயண அரங்கேற்றத்தின்போது சிரக்கம்பம் செய்து ஆமோதித்த 'மேட்டு அழகிய சிங்கர்' என்னும் நரசிம்ம மூர்த்திக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ஸ்ரீமந் நாதமுனிகளால் உருவாக்கப்பட்ட திவ்ய பிரபந்தத்தை ராகதாளங்களுடன் பாடும் முறையான 'அரையர் சேவை' இங்கு நடந்து வருகிறது. தன்வந்திரி பகவான் சன்னதி இத்தலத்தில் உள்ளது.
ஸ்ரீஅஹோபில மடம் 44வது ஜீயரின் பெருமுயற்சியால் உலகிலேயே மிக உயரமான கோபுரமாக 236 அடி உயர இராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த இராஜகோபுரம் 13 நிலைகளையும், 13 கலசங்களையும் கொண்டது.
பெரியாழ்வார் 35 பாசுரங்களும், ஆண்டாள் 10 பாசுரங்களும், குலசேகராழ்வார் 31 பாசுரங்களும், திருமழிசை ஆழ்வார் 14 பாசுரங்களும், தொண்டரடிப் பொடியாழ்வார் 55 பாசுரங்களும், திருப்பாணாழ்வார் 10 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 73 பாசுரங்களும், பொய்கையாழ்வார் ஒரு பாசுரமும், பூதத்தாழ்வார் 4 பாசுரங்களும், பேயாழ்வார் 2 பாசுரங்களும், நம்மாழ்வார் 12 பாசுரங்களுமாக மொத்தம் 247 பாசுரங்களால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
|